ஊரடங்கு தளர்வு; நெல்லையில் நூலகங்கள் திறப்பு
நெல்லையில் அனைத்து நூலகங்களும் திறக்கப்பட்டன.;
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அரசு நூலகங்கள் திறக்கப்பட்டது. அங்கு வாசகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து புத்தகங்களை படித்தனர்.
நூலகங்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடைகள், கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. பொது போக்குவரத்தும் இயக்கப்படுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.
இந்த நிலையில் அரசு பொது நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று முதல் அனைத்து நூலகங்களும் திறக்கப்பட்டது.
மாவட்ட மைய நூலகம்
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகம் நேற்று காலை திறக்கப்பட்டது. அங்கு ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
வாசகர்கள் குறைந்த அளவில் வந்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழையும் போது தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவர்களது கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம் அணிந்த வாசகர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே சென்று படிப்பதற்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்தனர். சமூக இடைவெளியுடன் அமர்ந்து புத்தகங்களை படித்தனர். போட்டித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் அதற்கு தேவையான புத்தகங்களை எடுத்து படித்தனர்.
பெரும்பாலும் வாசகர்களுக்கு தேவையான புத்தகங்களை நூலக பணியாளர்களே எடுத்து கொடுத்தனர்.
இதே போல் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள நூலகங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, வாசகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.