டிராவல்ஸ் உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
அம்பை அருகே டிராவல்ஸ் உரிமையாளர், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்பை:
அம்பை அருகே, கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் பிரச்சினையால் ரெயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டிராவல்ஸ் உரிமையாளர்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைக்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 33). இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
வெங்கடேஷ் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்தார். பின்னர் 2 கார்களை சொந்தமாக வாங்கினார். அந்த கார்களை வாடகைக்கு விட்டு டிராவல்ஸ் நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் கார்கள் வாடகைக்கு செல்லாததால் வருமானம் இல்லாமல் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கடேஷ் சொந்த ஊருக்கு வந்தார். கடன் பிரச்சினை காரணமாக அவர் சிறிது நாட்களாகவே மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை வெங்கடேஷ் ஆம்பூர் ரெயில் நிலையத்துக்கும், அம்பை ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள புளியங்குளம் அருகில் வந்தார். அப்போது அந்த வழியாக தென்காசியில் இருந்து நெல்லை வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ெரயில் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ெரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.