கடையில் நண்பரை ‘அடமானம்’ வைத்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஓட்டம்-ஓட்டிப்பார்பதாக கூறி நூதன திருட்டு
கடையில் நண்பரை அடமானம் வைத்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் தப்பி சென்றார். ஓட்டிப்பார்ப்பதாக கூறி நடந்த இந்த நூதன திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமாரபாளையம்:
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்
குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் குமாரபாளையத்தில் சேலம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சம்பவத்தன்று 2 வாலிபர்கள் கடைக்கு வந்தனர்.
அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதாக தெரிவித்தனர். அப்போது ரவிச்சந்திரன் அந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று தெரிவித்தார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்து, பின்னர் பணம் கொடுத்து வாங்கி கொள்வதாக கூறினார்.
திருட்டு
பின்னர் அவர் மற்றொரு வாலிபரை கடையில் விட்டு விட்டு, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். வெகு நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. இதனால் ரவிச்சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடையில் இருந்த வாலிபருடன் குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஈரோட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து, நண்பரை அடமானம் வைத்து விட்டு, நூதனமாக திருடி சென்றவர் பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 20) என்பதும் தெரியவந்தது.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுடன் மாயமான ராதாகிருஷ்ணனை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து, ஓட்டிப்பார்ப்பதாக கூறி அதனை நூதனமாக திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.