மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை: குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 150 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
புகையிலை பொருட்கள்
தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, அண்ணாதுரை, முருகேசன், பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் தர்மபுரி நகரில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும், பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் தர்மபுரி பகுதியை சேர்ந்த ஜஸ்வந்த் (வயது 20), முபாரான் (25), தினேஷ் (23), ஜெயந்திலால் (21), ரமேஷ் (28), கைலாராம் (32), லட்சுமன் (23), பாபுலால் (28), சக்திவேல் (40), சரவணன் (52), கார்த்திகேயன் (42) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
அரூர்-ஏரியூர்
அரூர் பஸ் நிலையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில் பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் போலீசார் செய்தனர். அப்போது சரவணன் (53), பிரதாப் குமார் (29), அந்தோணி (70), அருள்தாசன் (29) உள்ளிட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களின் கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள், குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புது சோளபாடியை சேர்ந்த தனபால் (54), மலையனூர் பச்சியண்ணன் (42), பவனா (40), சகுந்தலா (28), மஞ்சநாயக்கனஅள்ளி சுப்பிரமணி (53), பொன்னுராஜ் (40), ரேவதி (36), கடைமடை மாதம்மாள் (55) ஆகிய 8 பேரும் கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்த 150 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.