திண்டிவனம் அருகே 2 வீடுகளில் ரூ.8½ லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
திண்டிவனம் அருகே 2 வீடுகளில் ரூ.8½ லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பி.எம்.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் போலீஸ் பயிற்சி மையம் வைத்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது மகளின் பிறந்த நாளுக்காக கல்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
அதேபோல், இவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் லாரி உரிமையாளர் ரமேஷ் (வயது 52) என்பவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 22-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள முகாம்பிகை கோவிலுக்கு சென்றுவிட்டார்.
கொள்ளை
இரு வீட்டிலும் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் நேற்று முன்தினம், வீட்டுகதவ பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்தனர். இதில், ஜெகன் வீட்டில் இருந்த லேப்-டாப், 2 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
அதேபோல், ரமேஷ் வசித்து வரும் வீட்டில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய், ஒரு லேப்டாப் ஆகியவற்றையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸக் சூப்பிரண்டு கணேசன் மற்றும் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொள்ளை நடந்த 2 வீடுகளையும் பார்வையிட்டு, அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை போன நகை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ. 8½ லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.