அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குவிந்திருந்த மருத்துவ கழிவுகள் அகற்றம் கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் குவிந்திருந்த மருத்துவகழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பின்பக்க வளாகத்தில் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இது தொடர்பாக கடந்த வாரம் ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு தேக்கி வைக்கப்பட்டு இருந்த 150 மெட்ரிக் டன் மருத்துவ கழிவுகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கழிவுகள் விழுப்புரம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கழிவுகளை அழித்து வருகின்றனர்.
பூங்கா அமைக்கப்படும்
இதற்கிடையே மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் பணியை நேற்று காலை கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மருத்துவமனை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த மருத்துவ கழிவுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்ட பின்னர், குப்பை கொட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சுமார் 2 அடி அளவுக்கு பள்ளம் தோண்டப்படும்.
அதில், இயற்கை மண் உரங்களை கொண்டு நிரப்பி, பின்னர் அங்கு மரக்கன்றுகள் நடவு செய்து பூங்கா அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தண்ணீர் பற்றாக்குறை
அதை தொடர்ந்து, மருத்துவ மனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகளை பார்வையிட்ட கலெக்டர் மோகன், அங்கு பணியிலிருந்த டாக்டர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவ மனையில் கட்டப்பட்டு வரும் ஆக்சிஜன் பிளாண்ட் பணியை யும் பார்வையிட்ட அவர், அந்த பணிகளை துரிதபடுத்தி முடிக்கவும் உத்தரவிட்டார். அதோடு, மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக டாக்டர்களிடம் அவர் கூறினார்.
ஆய்வின் போது, பயிற்சி கலெக்டர் ரூபினா, கல்லுாரி டீன் குந்தவி தேவி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலி பேக், நிலைய மருத்துவ அலுவலர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த டாக்டர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.