செஞ்சி அருகே சாலை விபத்து முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் சாவு
செஞ்சி அருகே நடந்த சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.;
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள நங்காத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணி (வயது 52). முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று முன்தினம் இரவு நந்திவாடி கிராமத்தில் நடந்த காதணி விழாவுக்கு சென்றிருந்தார்.
பின்னர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் நங்காத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். முட்டத்தூர் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற முட்டத்தூரை சேர்ந்த வீராசாமி மகன் எல்லப்பன்(40) என்பவர் மீது மோட்டார் சைக்கிள்மோதி, சாலையோரம் விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
2 பேர் சாவு
இதையடுத்து அங்கிருந்தவர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட எல்லப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.