அஞ்செட்டி அருகே பிளஸ் 2 மாணவியை கர்ப்பிணி ஆக்கிய தொழிலாளி கைது உடந்தையாக இருந்த 7 பேரும் சிக்கினர்
பிளஸ்2 மாணவியை கர்ப்பிணி ஆக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.;
தேன்கனிக்கோட்டை:
பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணி ஆக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முறை தவறிய காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி பக்கமுள்ளது பேடரஹள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் கேசவன் (வயது 21). தொழிலாளி. இவர் 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இது முறை தவறிய காதல் ஆகும். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.
இந்த நிலையில் அந்த மாணவியை கேசவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு கேசவனின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிய வந்து, மாணவியின் பெற்றோர் கேசவனிடம் கேட்டுள்ளனர். அப்போது கேசவன் தரப்பினர் மாணவியின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது..
8 பேர் கைது
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கேசவன், சூர்யா என்கிற அழகேசன் (28), பச்சமுத்து (25), ஆனந்தன் (28), பச்சப்பன் (32), கிருஷ்ணன் (30), வாசன், மாதப்பன் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.