அதிமுக முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி சாவு

அதிமுக முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி சாவு

Update: 2021-07-24 16:26 GMT
கோவை

குக்கர் மூடியால் தாக்கப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

 சேவல் விற்பனை

கோவையை அடுத்த ஒண்டிபுதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இருகூர் ஊராட்சி அ.தி.மு.க. முன்னாள் வார்டு உறுப்பினர். 

இவரது வீட்டில் கார்த்திகேயன் (33) என்பவர் குடியிருந்து வருகிறார். சூலூரை அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (32). இவர் தனது நண்பரான கார்த்திகேயன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார்.

இதன் மூலம் சீனிவாசனுக்கும், சம்பத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட் டது. சம்பத்குமார் கடந்த 16-ந் தேதி தன்னிடம் இருந்த 3 சேவல்களை  சீனிவாசனிடம் கொடுத்து விற்பனை செய்து தருமாறு கொடுத்துள் ளார்.

 அதன்பிறகு 2 நாட்கள் கழித்து சம்பத்குமார் வந்து, சேவல்களை விற்பனை செய்து இருந்தால் பணத்தை தருமாறு சீனிவாசனிடம் கேட்டுள்ளார். 

கைது

அதற்கு அவர் நீங்கள் கொடுத்த 3 சேவல்களும் இறந்துவிட்டதால் தூக்கி வீசி விட்டேன் என்று கூறினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

 இதில் ஆத்திரமடைந்த சம்பத்குமார் வீட்டில் இருந்த குக்கர் மூடியால் சீனிவாசனின் தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பி சென்று விட்டார். 


படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சீனிவாசனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கு பதிவு

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதன் பிறகு மீண்டும் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

எனவே கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சம்பத்குமார் ஏற்கனவே சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்