புதர்மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா புதுப்பொலிவு பெறுமா
சின்னசேலத்தில் புதர்மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா புதுப்பொலிவு பெறுமா;
சின்னசேலம்
சின்னசேலம் சக்திபுரம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேரூராட்சி நிர்வாகம் மூலம் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்காக ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. விடுமுறை காலங்களில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பூங்காவுக்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர்.
ஆனால் காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபரகணங்கள் உடைந்து சேதம் அடைந்து கிடக்கிறது. பூங்கா வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போன்று காட்சி அளிக்கிறது. இதனால் அரசின் பணம் விரையமானதோடு கேட்பாரற்று கிடப்பதால் சிலர் பூங்காவை ஆக்கிரமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பல லட்சம் செலவழித்து அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து கிடக்கிறது. அதோடு பூங்காவை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பொது இடமான பூங்கா தனிநபரின் சொத்தாக மாறிவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. எனவே பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து புதுப்பொலிவுபெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.