சோலையாறு அணையில் தண்ணீர் திறப்பு

சோலையாறு அணையில் தண்ணீர் திறப்பு

Update: 2021-07-24 15:58 GMT
வால்பாறை

முழுகொள்ளளவை எட்டி நிரம்பியதால் சோலையாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.குடியிருப்புகள், தேயிலை தோட்டங்க ளை வெள்ளம் சூழ்ந்தது.


அணையில் தண்ணீர் திறப்பு

கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டி நிரம்பியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணிக்கு 163 அடியை தாண்டியது. 

ஆனாலும் வெளியேற்றப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் நேற்று காலை 9 மணியளவில் சோலையாறு அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டது. 

அதில் இருந்து வினாடிக்கு 1080 கன அடி தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு செல்கிறது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தற்போது சோலையாறு அணையில் இருந்து சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது. 

சோலையார் மின் நிலையம்-1 இயக்கப்பட்டு 396 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. மின் நிலையம்-2 இயக்கப்பட்டு வினாடிக்கு 416 கன அடித் தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 7300 கன அடித் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. ஆனால் அணைக்கு வினாடிக்கு 8500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணை மற்றும் சேடல்பாதை வழியாக தண்ணீர் வெளியேறுவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 

மழை காரணமாக வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. 

இது போல் கூழாங்கல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

அதிகாரிகள் கண்காணிப்பு

சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள உருளிக்கல், பெரியார்நகர் ஆகிய எஸ்டேட் தேயிலை தோட்டங்களையும் குடியி ருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழக -கேரள வன பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதையொட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோலையாறு அணையில் முகாமிட்டு நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஆற்றோர பகுதி மக்களுக்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி தாசில்தார் ராஜா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டு  உள்ளனர். 

மேலும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வெள்ள நிவாரண முகாம் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


மழை காரணமாக கேரள மாநிலம் மளுக்கப்பாறையில் இருந்து சாலக்குடிக்கு செல்லும் ரோட்டில் பத்தடிப்பாலம் பகுதியில் மண்அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஆனது. 

இதனால் அந்த ரோட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வால்பாறை பகுதி பொது மக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்