டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிக்கலில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-07-24 14:44 GMT
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் கோட்டேரி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 51) என்பவர் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு செல்வகுமார் மற்றும் ஊழியர்கள்  வீட்டுக்கு சென்றுள்ளனர். நேற்று காலை டாஸ்மாக் கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மேற்பார்வையாளர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் டாஸ்மாக் கடைக்கு வந்து பார்த்த போது கடை ஷட்டரின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, கடையில் இருந்து கண்காணிப்பு கேமரா திருப்பி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மதுபாட்டில்கள் மற்றும் பணம் திருட்டு போகவில்லை என்பது தெரிய வந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்