கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கம்பத்தில், கடையின் பூட்டை உடைத்து ரூ.38 ஆயிரம் திருட்டு போனது.
கம்பம்:
உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 37). இவர், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் சொட்டுநீர் பாசன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இவர், கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் வழக்கம்போல கடயை திறக்க அசோக் வந்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.38 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் அசோக் புகார் செய்தார். அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி, இன்ஸ்பெக்டர் சிலைமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
குறிப்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.