கஞ்சா செடிகள் வளர்த்த 2 வாலிபர்கள் கைது
பெரியகுளம் அருகே கஞ்சா செடிகள் வளர்த்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
கஞ்சா செடிகள்
பெரியகுளம் அருகே முருகமலை மலையடிவார பகுதியில் பூசணி மலை என்ற இடத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பெரியகுளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார், அந்த மாந்தோப்புக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு 22 செடிகள் இருந்தன. அவை 15 முதல் 25 சென்டி மீட்டர் உயரம் வரை வளர்ந்து இருந்தன. அந்த கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றினர்.
2 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செடிகளை தென்கரை இந்திராபுரி தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 24), பெரியகுளம் பங்களாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த மதன்குமார் (23) ஆகியோர் வளர்த்து வந்ததாக தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், மதன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மலையடிவாரத்தில் கஞ்சா சாகுபடி செய்வதற்காக, அவற்றை வளர்த்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------