உபரி நீர் வெளியேற்றம்
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்வதால் அமராவதி அணையில் இருந்து நேற்று 2வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தளி
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்வதால் அமராவதி அணையில் இருந்து நேற்று 2வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு கரும்பு, தென்னை, வாழை, நெல் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் அமராவதி அணை விளங்கிவருகிறது.
இந்த சூழலில் கடந்த 10 நாட்களாக மூணார், காந்தளூர், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 5000 கனஅடிக்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்துநேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 87 அடியை கடந்ததால் 3 மதகுகள் வழியாக அமராவதிஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நேற்றும் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி நேற்று காலை 10 மணியளவில் கூடுதலாக 2 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 5 மதகுகள் வழியாக தலா 600 கனஅடி வீதம் 3000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
அத்துடன் பிரதான கால்வாயில் 100 கனஅடி தண்ணீரும் மின் உற்பத்திக்காக 800 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட தகவல் சுற்றுபுற கிராமங்களில் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக அணைப்பகுதியில் திரண்டனர். பின்னர் உபரி நீர் வெளியேறுவதை புகைப்படம் எடுத்ததுடன் மதகுகள் முன்பாக பாலத்தில் நின்று செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் தொடர்ந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது கன மழை பெய்வதற்கான சூழல் நிலவியது.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை உதவி பொறியாளர் பாபு சபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் நீர்வரத்து அதிகரித்தால் அணையில் உள்ள 9 கண்மதகுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகின்ற ஷட்டர்கள் மற்றும் பிரதான கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 90 அடியில் 87. 64 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 920 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
------------------
அமராவதி அணையின் மதககுள் அருகே சுற்றுலாபயணிகள் செல்பி எடுத்து மகிழ்வதை காணலாம்.