வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கைவரிசை: அரசு பெண் அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.1.30 லட்சம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அரசு பெண் அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.1.30 லட்சம் மோசடி செய்த மர்மநபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-07-24 05:39 GMT
சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்பவர் மாலதி. இவர் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து பேசுவது போல மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசினார். மாலதியின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்றும், அதை புதுப்பிக்க வேண்டும் என்றும், அந்த நபர் தெரிவித்தார்.

அதை உண்மை என்று நம்பிய அதிகாரி மாலதி, ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண் மற்றும் ஓ.டி.பி.எண் ஆகியவற்றை கூறி விட்டார்.

இதை பயன்படுத்தி மாலதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.30 லட்சம் பணத்தை அந்த மர்மநபர் சுருட்டி விட்டார். அந்த மர்ம நபர் ஒரு மோசடி பேர்வழி ஆவார். பணத்தை இழந்த அதிகாரி மாலதி, இது குறித்து திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். இதுபோல் செல்போனில் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்