கல்பாக்கம் அருகே நடுகல்லுக்கு கோவில் அமைத்து வழிபடும் சந்ததினர்
கல்பாக்கம் அருகே நடுகல்லுக்கு கோவில் அமைத்து சந்ததினர் வழிபட்டு வருகின்றனர்.;
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நெற்குணபட்டு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தேவதாஸ் (வயது 68). இவர் தற்போது அரக்கோணம் பகுதியில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். அவர் நேற்று கல்பாக்கத்தை அடுத்த புன்னமை கிராமத்தில் தீப்பாஞ்சம்மன் கோவில் என்ற அம்மன் கோவிலை சிறிய அளவில் புதிதாக அமைத்து வழிபாடுகள் செய்தார்.
தகவலறிந்து அந்த கோவிலுக்கு சென்று சிலையை ஆய்வு செய்தபோது அது நடுகல் என்பது தெரியவந்தது.
இது குறித்து தேவதாசிடம் கேட்டபோது:-
எனக்கு காஞ்சீபுரத்தில் 1980-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது எனது சகோதரிக்கு சாமியாட்டம் வந்து, நீ என்னை மறந்து விட்டாய். எனக்கு செய்யவேண்டிய மரியாதையை் செய்யவில்லை. உடனடியாக உரிய மரியாதையை செய் என்று அருள்வாக்கு சொன்னார்.
அதன் பிறகும் இதுபோல பலமுறை சொன்னதால் நான் அதற்கான முயற்சிகளை குடும்பத்து பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து சீவாடி ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தரமூர்த்தி உதவியுடன் அந்த இடத்தில் 1981-ம் ஆண்டு கோவில் அமைக்கும் பணிகளை மேற்கொண்டேன். இந்த இடத்துக்கு வந்து தேடி பார்த்த போது முட்புதர்களுக்கிடையே இந்த சிலையை கண்டுபிடித்தேன். அதை வெளியே எடுத்து பார்த்தபோது 4 அடி உயரமும் 1½ அடி அகலமும் இருந்தது. அதை சுத்தம் செய்து வழிபட்டு வந்தோம். இப்போது சிறிய அளவில் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை அமைத்துள்ளோம் என்றார்.
அவரது மனைவி புஷ்பா பேசும்போது:-
எங்கள் முன்னோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். கணவருக்காக கஞ்சி எடுத்து வரும்போது கணவர் இறந்த தகவல் தெரிந்து தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறி உயிர்துறந்ததாக முன்னோர் தெரிவித்தனர். அந்த அடிப்படையில் தீப்பாய்ந்த அம்மன் என்று பெயர் வைத்துள்ளோம் என்றார்.
நடுகல் குறித்து தமிழ்நாடு தொல்லியல்துறை துணை கண்காணிப்பாளர் முனைவர் வசந்தியிடம் கேட்டபோது:-
இந்த நடுகல் 16-ம் நூற்றாண்டு இறுதி, அல்லது 17-ம் நூற்றாண்டு தொடக்கத்தை சேர்ந்த நாயக்கர் காலத்தை சேர்ந்தது எனவும் நடுகல்லில் காணப்படும் ஆண் உருவத்தின் கொண்டை அலங்காரம், காதுகளில் குண்டலம், தோளில் வில் ஆயுதம், இடுப்பில் குறுவாள் வணங்கிய நிலையில் இரு கரங்களுடன் காணப்படுவதால் அவர் ஒரு குறுநில மன்னர் அல்லது ஜமீன்தாராக இருந்திருப்பார் என்று கூறினார்.
வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வகுமார் கூறும்போது, ‘‘இந்த நடுகல்லை பார்க்கும்போது ஆண் உருவம் நீளமான காதுகளுடன் முறுக்கிய மீசையும் இடுப்பை சுற்றி இடைக்கச்சை, கழுத்தில் மணி வடம் அணிந்து காணப்படுகிறது. பெண் உருவத்தில் முழங்கால் வரை உடை காணப்படுகிறது. அவரது தலையில் கொண்டை வலது புறம் சரிந்து உள்ளது ஒரு அரசியின் உடை. எனவே இந்த நடுகல் விஜயநகர காலத்தை சேர்ந்தது’’ என்றார்.