தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை திட்ட பணி வழங்கக்கோரி பெண்கள் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறையை முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-24 03:37 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரம் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்ட பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பழையசீவரம் சின்ன காலனி பகுதியை சேர்ந்த 280 பயனாளிகள் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பு வழங்காதது குறித்து பழையசீவரம் ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தங்களுக்கு வேலை வழங்கக்கோரி பழைய சீவரம் சின்ன காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறையை முற்றுகையிட்டனர். 

ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்பட்டு வரும் நிலையில் தங்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்