உரிய விலை கிடைக்க மஞ்சளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மஞ்சளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-23 21:47 GMT
ஈரோடு
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மஞ்சளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்பவானி பாசனம்
ஈரோடு மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சி.என்.துளசிமணி கூறியதாவது:-
பவானிசாகர் அணையில் மொத்த உயரமான 105 அடியில் தற்போது 97.50 அடிக்கு நீர் உள்ளது. கோவை, நீலகிரி பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்கு வினாடிக்கு, 14 ஆயிரத்து 938 கனஅடி நீர் வரத்தாகிறது. ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால், விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தி, சாகுபடி பணியை தொடங்குவார்கள். அதற்கேற்ப, கீழ்பவானியில் பராமரிப்பு பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.
ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறந்தால், அதற்கு முன்பாக அணை நிரம்பி பவானி ஆறு மூலம் வீணாக கடலில் நீர் கலக்கும். அவ்வாறு நிகழாமல் விவசாயிகள் பயன்படுத்தவும், நிலத்தடி நீர் உயரவும் வழி செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திருத்த மசோதா, புதிய வேளாண் கொள்கைகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சள்
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-
பவானிசாகர் அணை நீர் வீணாகாமல் இருக்க வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், சிலரது லாபத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணி நடப்பதை நிறுத்தி, மறு ஆய்வு செய்து பணியை தொடங்க வேண்டும். கூட்டுறவில் கடன் ரத்தான உறுப்பினர், புதிய உறுப்பினர் என அனைவருக்கும் வேளாண் கடன், பயிர் கடன் தர வேண்டும். தள்ளுபடியான கடனுக்கான நகைகளையும் திரும்ப தர வேண்டும். மரவள்ளி கிழங்கை மாவு பூச்சி தாக்குவதால், அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மஞ்சள் குவிண்டால், ரூ.10 ஆயிரம் வரை விற்ற நிலையில் தற்போது, ரூ.6 ஆயிரத்து 500-க்கு தான் விலை போகிறது. எனவே, மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க, அரசே விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறும்போது, ‘‘விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு அனுப்பப்படும். மாவட்ட நிர்வாகத்தால் செய்யும் பணிகள் உடன் நிறைவேற்றப்படும். மாநில அரசு நிறைவேற்றும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்