போத்தனூரில் மூதாட்டியை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு
போத்தனூரில் மூதாட்டியை தாக்கி 11 பவுன் நகையை பறித்து சென்ற முகக்கவசம் அணிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போத்தனூர்
போத்தனூரில் மூதாட்டியை தாக்கி 11 பவுன் நகையை பறித்து சென்ற முகக்கவசம் அணிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வயதான தம்பதி
கோவையை அடுத்த போத்தனூர் அருகே என்.பி.இட்டேரி கலாசி நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 75). இவருடைய மனைவி ஜகாரா (66). இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் பக்ருதீன்-ஜகரா ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
அவர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்களது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே ஜகாரா எழுந்து கதவை திறந்தார்.
11 பவுன் நகை பறிப்பு
அப்போது வீட்டின் வாசலில் முகக்கவசம் அணிந்தபடி 2 வாலிபர்கள் நின்றனர். அவர்கள் திடீரென்று ஜகாராவை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டதும் பக்ருதீன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.