4-வது முறையாக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் எடியூரப்பா

முதல்-மந்திரி எடியூரப்பா 4-வது முறையாக பதவியை ராஜினாமா செய்கிறார். அவர் ஒரு முறை கூட ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

Update: 2021-07-23 21:24 GMT
பெங்களூரு: முதல்-மந்திரி எடியூரப்பா 4-வது முறையாக பதவியை ராஜினாமா செய்கிறார். அவர் ஒரு முறை கூட ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

7 நாட்கள் மட்டுமே...

தென்இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பா.ஜனதா பலமான கட்சியாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்தில் எடியூரப்பா கட்சியை பலப்படுத்தினார். தொடக்க காலக்கட்டத்தில் இருந்து படிப்படியாக கட்சியில் பல்வேறு பதவிகளை எடியூரப்பா வகித்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் (எஸ்) கட்சியும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.

ஆளுக்கு 20 மாதங்கள் ஆட்சி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 20 மாதங்கள் ஆட்சி செய்தார். அதன் பிறகு ஒப்பந்தப்படி எடியூரப்பா 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி சரியான ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால், கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் 7 நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தார்.

பா.ஜனதா ஆட்சி அமைந்தது

அதன் பிறகு கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் தேவை என்ற நிலையில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகளின் ஆதரவுடன் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். இதன் மூலம் தென்இந்தியாவில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இது அகில இந்திய அளவில் பா.ஜனதாவுக்கு பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கியது.

அவர் சுமார் 3½ ஆண்டுகள் பதவியில் இருந்த நிலையில் ஊழல் புகார் எழுந்ததை அடுத்து பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவின்பேரில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் வழக்கில் சிறைக்கும் சென்றார். அதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

தனிப்பெரும் கட்சியாக...

ஆனால் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கும் நோக்கத்தில் மதசார்பற்ற கொள்கைகளை கொண்ட காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.

இதை ஏற்க மறுத்துவிட்ட கவர்னர் வஜூபாய்வாலா, பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் எடியூரப்பாவை அழைத்து அவசர அவசரமாக முதல்-மந்திரியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் 15 நாட்கள் வழங்கிய நிலையில் 3 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாததால், எடியூரப்பா பதவி ஏற்ற 3 நாட்களில் ராஜினாமா செய்தார்.

4-வது முறையாக ராஜினாமா

பிறகு கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அதாவது 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா 4-வது முறையாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அவர் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்து வருகிற 26-ந் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

வயது மூப்பு காரணமாக பா.ஜனதா மேலிடம் ஏற்கனவே கூறியபடி எடியூரப்பா வருகிற 26-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகமொத்தம் 3 முறை முதல்-மந்திரி பதவி ஏற்ற எடியூரப்பா, ஒரு முறை கூட ஆட்சி காலத்தை முழுமை செய்யவில்லை. 3 முறையும் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது 4-வது முறையாகவும் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கான வாய்ப்பு எடியூரப்பாவுக்கு கிடைக்கவில்லை என்ற குறை அவரது வரலாற்றில் இடம் பெறுகிறது.

மேலும் செய்திகள்