சதுரகிரி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-23 19:56 GMT
வத்திராயிருப்பு, 
ஆடி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
ஆடி மாத பவுர்ணமி 
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 
சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடந்தது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி 
பின்னர் மதியம் 12 மணிக்கு வனத்துறை கேட் மூடப்பட்டது. மலைப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் கோவில் வளாகப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. எனவே மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலைக்குள் தரை இறங்கினர்.
அதேபோல நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நீரோடை பகுதிகளில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தரிசனம் செய்து திரும்பிய பக்தர்களுக்கு குன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தாணிப்பாறை வரை செல்வதற்கு வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.
அபிஷேகம் 
ஆடி மாத பவுர்ணமியையொட்டி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. 
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விசுவநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்