திருவோணம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

திருவோணம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-23 17:39 GMT
ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் இலுப்பை விடுதி கிராமப்பகுதியில் வேங்கையன் என்பவர் குறுவை சாகுபடி செய்ய குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விதைநெல், ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ராஜாளி விடுதி கிராமத்தில் செயல்படும் உரக்கிடங்கினை ஆய்வு செய்த அவர், அங்கு ரசாயன உரங்களின் இருப்பு குறித்தும், அவைகள் முறையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தங்கு தடையின்றி விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். தோப்புவிடுதி, ராஜாளி விடுதி, வண்ணார கொல்லைப்பட்டியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருவோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர், மக்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா? என கேட்டறிந்தார். தொடர்ந்து பரிசோதனை மையம், பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை செய்யப்படும் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், பதிவேடுகளையும் சரிபார்த்தார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? எனவும், அங்கன்வாடி மூலம் ஊட்டச்சத்து மாவுகள் முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் பதிவேடுகளை பார்வையிட்ட கலெக்டர், பிரதமமந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அனைத்து அலுவலர்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது திருவோணம் ஒன்றியக்குழு தலைவர் செல்லம், தாசில்தார் சீமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், தவமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்