தஞ்சையில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி கூடைப்பந்து கழக செயற்குழு முடிவு
தஞ்சையில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்துவது என தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எஸ்.எஸ்.ராஜகுமாரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஜவகர் பாபு, நியூட்டன், சந்தோஷ்குமார், கென்னடி, இணை செயலாளர்கள் மனோகரன், முருகானந்தம், துரைராஜ் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கதிரவன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
தஞ்சை மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்துவது. தஞ்சை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒவ்வொரு அணியிலும் தலா 3 பேர் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டியை நடத்துவது.
உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு கூடைப்பந்து போட்டி விதிமுறைகள் பற்றிய கருத்தரங்கம் நடத்துவது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களிடையே கூடைப்பந்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கிராமங்களில் கூடைப்பந்து போட்டி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் சதீஷ் ஆனந்த் நன்றி கூறினார்.