ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரத்தில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

Update: 2021-07-23 17:14 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தி.மு.க.வினால் முடக்கப்படும் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாகவும், தி.மு.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


அதன் பிறகு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டது விழுப்புரத்தில் தான். கல்விக்கு தேவையானவற்றை செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது.

ஒரே ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகளை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு தான். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ நிதி நெருக்கடியிலும் பல்வேறு பணிகளை தடையின்றி செய்ததால் தான் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பல்கலைக்கழகத்தை மூட தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது. நிதி நெருக்கடி என பொன்முடி சொல்வது பொய். மாணவர்கள் மீது அக்கறை இல்லாத அரசாகத்தான் தி.மு.க. உள்ளது.
 
ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் தொகுதி வாக்காளர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தை மூடும் பணியில் பொன்முடி ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் மீது தி.மு.க.விற்கு அக்கறை இல்லை. ஜெயலலிதா பெயர் இருக்கக்கூடாது என்பதே பொன்முடியின் எண்ணமாக உள்ளது.

இதற்கு விழுப்புரம் மாவட்ட மக்கள் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கும் தி.மு.க.வை கண்டித்தும், பல்கலைக்கழகத்தை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாளை மறுநாள் (திங்கட்                     கிழமை) காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்