ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு, ஷேர், வாடகை ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சவாரி கிடைக்காமல் தவிப்பதாகவும் அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
கடலூா்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. அதன்பிறகு ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் மாநகர, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை பெண்கள் அனைவரும் வரவேற்றனர்.
பெண்களை தொடர்ந்து, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாநகர மற்றும் நகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன்படி, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநகர மற்றும் நகர பஸ்களில் ஏறி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் ஆட்டோக்களில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு பக்கம் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் இதனால் சிலருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் வாடகை ஆட்டோ டிரைவர்கள் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறிய கருத்துகள் பற்றிய விவரம் வருமாறு:-
சவாரி கிடைப்பது இல்லை
விருத்தாசலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் கூறுகையில், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற விதிமுறை, தற்போது நடைமுறையில் உள்ளதால் பெண்கள் முன்பு போல் ஆட்டோவில் பயணம் செய்வது கிடையாது. விருத்தாசலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ரெயிலில் வரும் பயணிகள், பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் தான் பயணம் செய்வார்கள். ஆனால் நகர பஸ்களில் இலவச பயணம் என்றதும், அனைத்து பெண்களும் ரெயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று, நகர பஸ்களில் இலவசமாக பயணித்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் எங்களுக்கு சவாரி கிடைக்காததால், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
நிவாரண உதவி வேண்டும்
கடலூரை சேர்ந்த முரளி கூறுகையில் (வாடகை ஆட்டோ) :- பெண்கள் வெளியில் செல்கிறார்கள் என்றால் ஆட்டோவை தான் தேடி வருவார்கள். அந்தவகையில் வாடகை ஆட்டோவுக்கு சவாரி தேடிவந்தது. ஆனால் இப்போது பெண்களுக்கு பஸ்களில் இலவசம் என்று அறிவித்ததும், பெரும்பாலான பெண்கள் பஸ்களில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதனால் எங்களுக்கு சவாரி கிடைப்பது இல்லை. வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு தவிக்கும் எங்களுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. அதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நிவாரண உ தவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாழ்வாதாரம் பாதிப்பு
சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடியை சேர்ந்த முத்து கூறுகையில், நான் சிதம்பரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஊரடங்குக்கு முன்பு வரை ஓரளவுக்கு வருமானம் கிடைத்துவந்தது. பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறோம். இது ஒரு புறம் பாதிப்பு என்றால், மற்றொரு புறம் டீசல் விலை உயர்வால் வருமானமின்றி இருக்கிறோம். ஆட்டோவில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் பயணிப்பார்கள். தற்போது அவர்கள் அரசு பஸ்களின் வருகையை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். எங்களை யாரும் தேடுவதில்லை என்றார்.