‘ஜல் ஜீவன் மிஷன் திட்டம்’ ‘வீடுகள்தோறும் குடிநீர் திட்டமாக’ மாற்றம்: மற்ற திட்டங்களும் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்படும் விழுப்புரத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் வீடுகள்தோறும் குடிநீர் திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதேபோல் மற்ற திட்டங்களும் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை நேற்று காலை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி கஞ்சனூர் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த அவர், அங்கு ரூ.14.08 லட்சம் மதிப்பில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் வெங்கந்தூர், வீரமூர் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து மங்களபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காணை ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகள் ஆகியவற்றை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
ஆய்வுக்கூட்டம்
அதன் பின்னர் மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி திட்டப்பணிகள் மற்றும் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமான முறையிலும் விரைந்தும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக வளர்ச்சி பணிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால், தமிழகம் கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த நேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை பணிகள் தற்போது சிறப்பாக செயல்பட தொடங்கியிருக்கிறது.
இந்த அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட கூலியானது ரூ.250-ல் இருந்து ரூ.273-ஆக உயர்ந்திருக்கிறது.
எதிர்காலத்தில் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட அனைத்தையும் கருணாநிதியைப்போன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக்காட்டுவார்.
அந்த வகையில் இத்திட்டத்தின் கூலி 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். வெகு விரைவில் அதற்கான முயற்சி எடுக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தல்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த அரசு செய்யும். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் வீடுகள்தோறும் குடிநீர் திட்டமாக பெயர் மாற்றம் செய்து அமல்படுத்தப்படும். அதுபோல் மற்ற திட்டங்களுக்கும் தமிழில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கோபால், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் பல்லவிதேவி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன்நாயர், மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, உள்பட பலர் உடனிருந்தனர்.