பச்சிளம் குழந்தை எரித்துக் கொலை
நெய்வேலி அருகே பச்சிளம் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஆர்.கே. சாலையில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் நேற்று காலையில், பிறந்து சுமார் 6 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதை அங்கு விளையாட வந்திருந்த இளைஞர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தொிவித்தனா். அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் குழந்தையை கொன்றவர்கள் யார்?, கொன்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
போலீசார் விசாரணை
இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார்?, குழந்தையை வீட்டில் வைத்தே எரித்துக் கொன்று விட்டு, இங்கு உடலை வீசிச் சென்றார்களா?, அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் ஆண் குழந்தை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.