வால்பாறை சோலையாறு அணை நிரம்பியது

வால்பாறை சோலையாறு அணை நிரம்பியது

Update: 2021-07-23 16:49 GMT
வால்பாறை சோலையாறு அணை நிரம்பியது
வால்பாறை

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக 60 அடியாக இருந்த சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது.


இந்த நிலையில் சோலையாறு அணை  நிரம்பியதால், தானாக வெளியேறும் சேடல் பாதை வழியாக 867 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேறி வருகிறது. சேடல் பாதை வழியாக தண்ணீர் வெளியேறும் காட்சியை பொது மக்கள் கண்டு ரசித்தனர். 

தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருப்பதால் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு அருகில் தண்ணீர் சென்று வருகிறது. கூழாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஒடிவருகிறது.


சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள உருளிக்கல், பெரியார்நகர் ஆகிய எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. 

மழையால்  ஒரு தனியார் எஸ்டேட்டில்  தேயிலை இலை அளவை செய்யும் இடத்தின் கூரை உடைந்து விழுந்ததில் 5 பெண் தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் தனியார் எஸ்டேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோலையாறு அணையில் முகாமிட்டு அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் ஆற்றோர பகுதி மக்களுக்கு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலமாக விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்