திருவண்ணாமலையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2021-07-23 16:46 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலையில் உள்ள ரமணாஸ்ரமம் வரை உள்ள பகுதியில் தினமும் இரவு 10 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.  நேற்று ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி என்பதால் அப்பகுதியில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திருவண்ணாமலை ஆதிசேஷ நகரை சேர்ந்த ராதா (வயது 41) என்பவர் செங்கம் சாலையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு அக்னி குளத்தில் சிவலிங்கத்தை வழிபாடு செய்தார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென ராதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். 

அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வழிப்பறி சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்