கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்ற 75 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாக 75 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்றதாக 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்று கண்காணிக்கவும், அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 உட்கோட்டங்களுக்குட்பட்ட 30 போலீஸ் நிலைய பகுதிகளில் நேற்று போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது பெட்டி கடைகள், குடோன்கள், மளிகை கடைகள் என அனைத்து பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை ஜித்து (வயது 24), திலக் ராவ் (25), திருவண்ணாமலை சாலை தர்மன் (49), ராஜீவ் நகர் வெங்கடேசன் (32), ஓசூர் இந்திரா நகர் கவுதம் (45) உள்பட கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்றதாக மொத்தம் 75 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடும் நடவடிக்கை
இது குறித்து போலீசார் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், குடோன்களுக்கு சீல் வைக்கப்படும்.
தொடர்ந்து குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.