கயத்தாறு அருகே வங்கி முன்பு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து வாலிபர்கள் போராட்டம்
கயத்தாறு அருகே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளை கண்டித்து, அந்த வங்கி முன்பு வாலிபர்கள் போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளை கண்டித்து, அந்த வங்கி முன்பு வாலிபர்கள் போராட்டம் நடத்தினர்.
10 ரூபாய் நாணயங்களை...
கயத்தாறு அருகில் குப்பனாபுரம், உசிலங்குளம், மானங்காத்தான், ஆத்திகுளம், உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அய்யனாரூத்து மெயின் ரோட்டில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களுக்கு சென்று சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனுக்கும், வங்கியில் வைத்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவதற்காக வும் வங்கி சென்றால், அங்கு வங்கியில் பணிபுரியும் மேலாளர் முதல் அனைத்து அலுவலர்களும் 10 ரூபாய் நாணயங்கள் உள்ளிட்ட அனைத்து நாணயங்களையும் வாங்க மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தர்ணா போராட்டம்
நேற்று வழக்கம் போல் வங்கிக்கு 10 ரூபாய் நாணயங்களை கொண்டு சென்ற வாலிபர்களை வங்கி அலுவலர்கள் திருப்பி அனுப்பினர். இதை தொடர்ந்து அந்த வாலிபர்கள் வங்கி நுழைவு வாயிலில் 10 ரூபாய் நாணயங்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கி அலுவலர்கள் மீதும், பொதுமக்களை தரக்குறைவாக பேசும் மேலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இதுகுறித்து அந்த வாலிபர்கள் கயத்தாறு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.