குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி

திருவண்ணாமலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-23 12:32 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பி.சி.ஜி. தடுப்பூசி காசநோயைத் தடுக்கவும், ஹெபிடைடிஸ்-பி தடுப்பூசி மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் புற்றுநோயிலிருந்து காக்கவும், ஓ.பி.வி. சொட்டு மருந்து போலியோ நோய் வராமல் காக்கவும், பென்டாவாலன்ட் தடுப்பூசி கக்குவான் இருமல், ஜன்னி, எச்.ஐ.பி. எனப்படும் இடுப்பு நோய், இன்புளுயன்ஸா தொற்று மற்றும் கல்லீரல் தொற்று உள்ளிட்ட 5 நோய்களுக்கான தடுப்பூசிகளை உள்ளடக்கியது. 

ரோட்டா வைரஸ் தடுப்பூசி வயிற்றுப் போக்கு நோயிலிருந்து தடுக்கவும், மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி அம்மைநோய் வராமல் தடுக்கவும், ஜே.ஈ. தடுப்பூசி ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் வராமல் காக்கவும் இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. 

1 முதல் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து மற்றும் டி.பி.டி. தடுப்பூசி, ஜே.ஈ. தடுப்பூசி மற்றும் மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

தற்போது 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிப்படையச் செய்யும் நுரையீரல் அழற்சி எனப்படும் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோயிலிருந்து தடுக்கும் வகையில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் சென்னையில் கடந்த வாரம் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், இந்த தடுப்பூசியானது 6-வது வாரம், 14-வது வாரம் மற்றும் ஊக்கத் தவணையாக 9-வது மாதங்களில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் செலுத்தப்பட உள்ளது.

 நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி திட்டத்தின் படி ஆண்டுதோறும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 837 குழந்தைகள் பயனடைய உள்ளனர். பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியினை செலுத்தி நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோயில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும் என்றனர். 

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா, உதவி இயக்குனர் (புள்ளியியல் துறை) சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தி தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்