தடை காரணமாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால் இன்று கிரிவலப்பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால் இன்று கிரிவலப்பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கிரிவலத்துக்கு தடை
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 10.38 மணிக்கு தொடங்கியது. நாளை (சனிக்கிழமை) காலை 8.51 மணி வரை பவுர்ணமி உள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
வெறிச்சோடிய கிரிவலப்பாதை
இதனால் இன்று அதிகாலையில் இருந்து கிரிவலப்பாதையில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி மற்றும் போலீசார் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால் கிரிவலம் சென்று விடலாம் என்று உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். ஆனால் கிரிவலப்பாதைக்கு சென்றவர்களை போலீசார் பாதியிலேயே திருப்பி அனுப்பினர்.
இதனால் அவர்கள் மனவேதனையுடன் திரும்பி சென்றனர். சிலர் போலீசார் சொல்வதையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர்.
சிலர் மாற்று பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சிலர் கிரிவலம் சென்றனர்.
ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
செங்கம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் அந்த வழியாக அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
வாகனங்களை மட்டும் செல்ல அனுமதிக்குமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை கூறினார்.
கிரிவலப்பாதையில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டது.
கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக பவுர்ணமி தினமான இன்று கிரிவலப்பாதை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.