காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-23 04:29 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பெயிண்டு் நிறுவனத்தில் இருந்து பெங்களூருவுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சென்னை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர் தலைமையில் ஆய்வாளர் விநாயகம் மற்றும் குழுவினர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி சந்திப்பில் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியை சோதனை செய்தபோது பெயிண்டு பொருட்களுடன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்வது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டபோது அதில் 3½ டன் எடை கொண்ட அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இது தொடர்பாக ஆட்டுப்புத்தூரை சேர்ந்த தங்கமணி (வயது 26), மருதம் கிராமத்தை சேர்ந்த ரூத்துகுமார் (24), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிவக்குமார் தலைமறைவானார். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகளை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்