ஊத்துக்கோட்டையில் குண்டும், குழியுமாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் அவதி

ஊத்துக்கோட்டையில் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2021-07-22 23:57 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பிச்சாட்டூர், நாகலாபுரம், ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது.

பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவதால் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு வாகனப்போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.28 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பாலப்பணிகள் நடைபெறும் இடதுபுறத்தில் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணிகள் தொடங்கி 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவு பெறவில்லை.

ஆமை வேகத்தில் பாலப்பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த சாலை குண்டும், குழியுமாக, சேறும், சகதியுமாக மாறி உள்ளது. கட்டுப்பாடு இழந்து வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.

மேலும் பாலம் ஒட்டியுள்ள பெட்ரோல் நிலையம் எதிரே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

3 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாலப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஊத்துக்கோட்டை பொதுமக்கள் கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டங்கள் நடத்திய போது மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் இன்னும் பணிகள் முடிவு பெறவில்லை. பாலப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்