இரைதேடி வந்த காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்து செத்தது

மருங்காபுரி அருகே இரைதேடி வந்த போது கிணற்றில் விழுந்த காட்டெருமை பரிதாபமாக செத்தது.

Update: 2021-07-21 19:52 GMT
மணப்பாறை,

மருங்காபுரி அருகே இரைதேடி வந்த போது கிணற்றில் விழுந்த காட்டெருமை பரிதாபமாக செத்தது.

கிணற்றில் விழுந்த காட்டெருமை

  மருங்காபுரி தாலுகா பகுதியில் குமரிகட்டி, கண்ணூத்து, கருப்பரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு மலைகளில் காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் முத்தலம்பட்டியில் கடந்த 19-ந்தேதி இரைதேடி வந்த காட்டெருமை ஒன்று அப்பகுதியில் சுமார் 25 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தது.
  நேற்று முன்தினம் மாலை கிணற்றில் இருந்து சப்தம் வருவதை அறிந்து தோட்ட உரிமையாளர் பார்த்த போது தான் கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆனால் இரவு நேரம் ஆகி விட்டதால் காட்டெருமையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது.

செத்தது

  இதனால் வனத்துறையினர் கிணற்றிற்குள் காட்டெருமைக்கு தேவையான உணவுகளை போட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டெருமை இறந்து போனது.
  இதையடுத்து வனத்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் இறந்து போன காட்டெருமையை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததை அடுத்து புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்