சமயபுரம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்

சமயபுரம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரம் மது பாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-20 19:19 GMT
சமயபுரம், 
சமயபுரம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 4 ஆயிரம் மது பாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுபாட்டில்கள் பதுக்கல்

சமயபுரம் அருகே உள்ள இருங்களுர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சமயபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், குமரேசன் மற்றும் போலீசார் அப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ரகசிய விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் தெற்கு இருங்களுரை சேர்ந்த லாரன்ஸ் (வயது 45) என்பவர் அவருக்கு சொந்தமான தோப்பில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தோட்டத்துக்கு விரைந்து சென்றனர்.

4 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்

அங்கு ஒரு அறையில் அட்டைப் பெட்டிகளில் சுமார் 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரன்சை தேடி வருகிறார்கள். 
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு மதுபாட்டில்களை அவர் எந்தெந்த அரசு மதுபான கடைகளில் வாங்கினார்? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது பற்றியும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்