திருச்சி மத்திய மண்டலத்தில் ஆன்லைன் மோசடியை தடுக்க, ‘சைபர் கிரைம் கிளப்’ தொடக்கம்; 3 ஆயிரம் கிராமங்களில் செயல்படுத்த திட்டம்
திருச்சி மத்திய மண்டலத்தில் ஆன்லைன் மோசடியை தடுக்க ‘சைபர் கிரைம் கிளப்’ தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் 3 ஆயிரம் கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மத்திய மண்டலத்தில் ஆன்லைன் மோசடியை தடுக்க ‘சைபர் கிரைம் கிளப்’ தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் 3 ஆயிரம் கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
முதியோர் கண்காணிப்பு
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில், கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர்களை குறிவைத்து நடக்கும் கொலை, கொள்ளைகளை தடுக்க கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கிராமங்களில் உள்ள முதியோர் வசிக்கும் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட எல்லையில் உள்ள போலீசார் சென்று குறைகளை கேட்பதுடன் அங்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வர போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
சைபர் கிரைம் கிளப்
அதைத்தொடர்ந்து ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய யோசனை தோன்றியது. அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 3 ஆயிரம் தாய் கிராமங்களில் ‘சைபர் கிரைம் கிளப்’ என்ற திட்டத்தை செயல்படுத்த எண்ணி, நாகப்பட்டினத்தில் போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணனால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது குறித்து மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
9 மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் 3 ஆயிரம் தாய் கிராமங்களை தேர்வு செய்து கிளப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் கிரைம் கிளப்பிற்கு மக்களுடன் நெருங்கி பழகும் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் அறிவுடைய இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகிறோம். அவர்களுக்கு ‘டெலிகிராம் ஆப்’ என்ற புதிய செயலி கொடுக்கப்பட்டுள்ளது.
கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
அந்த செயலியில் அவ்வப்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள், தொலைபேசி அழைப்பை உருவாக்கும் மோசடி, தனிநபர்களுக்கான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடுவதற்கான யுக்தியை தடுப்பது, இண்டர்நெட் வங்கி/யூ.பி.ஐ. மோசடி மற்றும் போலி வலைதளங்கள் குறித்த தகவல்கள் காவல்துறை மூலம் பரிமாற்றம் செய்யப்படும்.
கிராம மக்களிடம் நேரடியாகவும், வாட்ஸ்-அப் குரூப் மூலமாகவும் ஆன்லைன் மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவற்றை மாவட்ட கூடுதல் சூப்பிரண்டுகள் கண்காணிப்பார்கள். காவல் நிலைய அளவிலும் 2 போலீசார் சைபர் கிரைம் கிளப் செயல்பாடுகளை கண்காணிப்பர். அப்பாவி மக்கள் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை பறிகொடுத்து தவித்து வருகிறார்கள்.
அதை தடுக்கவே புதிய கிளப். திருச்சி மத்திய மண்டலத்தில் இதுவரை 40 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகி உள்ளது. அவற்றில் 12 வழக்குகள் திருச்சியிலும், 8 வழக்குகள் தஞ்சையிலும் பதிவாகி உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.