மழைக்காலங்களில் செம்மறியாடுகளை துள்ளுமாரி நோய் தாக்க வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
மழைக்காலங்களில் செம்மறியாடுகளை துள்ளுமாரி நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழன்) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 2 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும்.
கறவை மாடுகளில் பால் உற்பத்தியை நிலைப்படுத்த மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கறவை மாடுகளுக்கு தீவனம் குறைந்தால், உடனடியாக பால் அளவு குறையும். எனவே மாடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் வைக்கோலினை கொடுக்க வேண்டும்.
துள்ளுமாரி நோய்
செம்மறியாடு, வெள்ளாடுகளுக்கு ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை இனவிருத்தி காலம் ஆகும். இந்த காலமானது தீவன அளவையும், தட்பவெப்ப நிலையையும் பொறுத்து அமையும். எனவே இந்த காலங்களில் கூடுதலாக அடர்தீவனம் அளித்தால், ஆடுகள் அதிக அளவிலான குட்டிகள் ஈன வாய்ப்பு உள்ளது. மேலும் குட்டிகளின் பிறப்பு எடை சீராக இருக்கும்.
பொதுவாக மழைக்காலங்களில் செம்மறியாடுகளை துள்ளுமாரி நோய் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிதாக முளைத்த பசுமையான புல்வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகம் காணப்படும். இது எல்லா ஆடுகளை தாக்கினாலும், இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியினை அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி மழைக்காலத்திற்கு முன்பாக அளித்து துள்ளுமாரி நோயில் இருந்து ஆடுகளை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.