ஆவின் பாலகம் சூறை-ஊழியர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ராசிபுரத்தில் ஆவின் பாலகத்தை சூறையாடி, ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-07-20 19:06 GMT
ராசிபுரம்:
ஆவின் பாலகம் சூறை
ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி சீனிவாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் செல்வா (வயது 20). இவர் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் நுழைவு வாயிலில் உள்ள ஆவின் பாலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோனேரிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் குணா (21), பெயிண்டர்கள் தம்புடு என்கிற ராமகிருஷ்ணன் (26), கார்த்தி (26) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு செல்வா, இவருடைய நண்பர் ஹரிஸ் ஆகியோர் ஆவின் பாலகத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த குணா மற்றும் இவருடைய நண்பர்களான ராமகிருஷ்ணன், கார்த்தி, தீனா, பாஸ்கர் கடைக்குள் புகுந்து செல்வா, ஹரிசை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆவின் பாலகத்தில் இருந்த மின்சார பல்புகள், கண்ணாடி பாட்டில்கள், பால்பாக்கெட்டுகள் ஆகியவற்றை சேதப்படுத்தி, பாலகத்தையும் சூறையாடினர். 
3 பேர் கைது
இதுகுறித்து செல்வா ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆவின் பாலகத்தை சூறையாடி, ஊழியரை தாக்கியதாக கல்லூரி மாணவர் குணா, ராமகிருஷ்ணன், கார்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் 3 பேரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தீனா, பாஸ்கரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்