நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணய தொகையை தர இயலாது என அதிகாரி கூறியதால் ஆத்திரம்
வாலாஜா டோல்கேட் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணய தொகையை தர இயலாது என அதிகாரி கூறியதால் ஆத்திரம் அடைந்தவர்கள் கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.;
ராணிப்பேட்டை
வாலாஜா டோல்கேட் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணய தொகையை தர இயலாது என அதிகாரி கூறியதால் ஆத்திரம் அடைந்தவர்கள் கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
டோல்ேகட் விரிவாக்க பணி
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் இயங்கி வருகிறது. இந்த டோல்கேட் விரிவாக்கப் பணிக்காக இருபுறமும் 2016-ம் ஆண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இடது புறம் 11 ஏக்கர், வலதுபுறம் 11 ஏக்கர் என நஞ்சை, புஞ்சை, வீட்டுமனை என 236 நபர்களின் 22 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு அரசாங்கம் இந்த நிலத்தை கையகப்படுத்தியது.
இதனையடுத்து 2019-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சதுர அடிக்கு ரூ.2,500 என மதிப்பீடு செய்து அவார்டு வழங்கப்பட்டு, அதனை 90 நாட்களுக்குள் நிலம் எடுத்த நபர்களுக்கு பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 90 நாட்களுக்குள் பணம் வழங்கவில்லை.
கோர்ட்டில் மனுத்தாக்கல்
இதனால் 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நிலம் கொடுத்தவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவின் வழக்கு 2020-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் பணம் வழங்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.
ஆனால் இதுநாள் வரையும் பணம் வழங்கவில்லை. மேலும் டோல்கேட் விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நபர்களின் நிலம் சம்பந்தமாக கடந்த ஒரு வாரம் முன்பு தேசிய நெடுஞ்சாலை நில கையகப்படுத்தும் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்தது.
அதன்பேரில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நிலம் கொடுத்தவர்கள் சுமார் 50 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெளிநடப்பு
அந்த கூட்டத்தில் சதுர அடிக்கு ரூ.2 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்தது தவறுதலாக முடிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஒரு சதுர அடிக்கு ரூ.100 அல்லது ரூ.120 மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் சென்னசமுத்திரம் டோல்கேட்டில் சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்து அங்கு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, வாலாஜா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் முன்கூட்டியே வாலாஜா டோல்கேட் சென்று சாலை மறியலில் ஈடுபடுவதாக இருந்த நபர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் யாரும் சாலை மறியலில் ஈடுபட கூடாது, உங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு நிலம் கொடுத்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.