கேரட் மூட்டைகள் ஏற்றி வந்தபோது லாரி கவிழ்ந்து 17 பேர் படுகாயம்

கேரட் மூட்டைகள் ஏற்றி வந்தபோது ஊட்டி-இத்தலார் சாலையில் லாரி கவிழ்ந்து 17 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-07-20 17:37 GMT
ஊட்டி

கேரட் மூட்டைகள் ஏற்றி வந்தபோது ஊட்டி-இத்தலார் சாலையில் லாரி கவிழ்ந்து 17 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

லாரி கவிழ்ந்தது

நீலகிரி மாவட்டம் ஊட்டி எமரால்டு அருகே பெம்பட்டி கிராமத்தில்  கேரட் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் கேரட் மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு அப்புகோடு பகுதியில் உள்ள கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் கழுவுவதற்காக அங்கிருந்து புறப்பட்டது.  

லாரியை ஸ்டீபன் ஓட்டினார். தொழிலாளர்கள் கேரட் மூட்டைகளின் மேல் அமர்ந்து இருந்தனர். இத்தலார்-ஊட்டி சாலை எல்லக்கண்டி பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் கவிழ்ந்தது.
 
17 பேர் படுகாயம் 

இதனால் அந்த லாரியின் பின்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த எமரால்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் போர்த்தியாடா கிராமத்தை சேர்ந்த தங்கம்மாள் (வயது 58) என்பவருக்கு இடது கை முறிந்தது. 

அதுபோன்று அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (18), ரஞ்சித் (23), ராமஜெயம் (25), சஞ்சய்குமார் (19), சுதாகர் (22), குணசேகரன் (35), ராஜேஸ்வரன் (19), ராமு (42) உள்பட 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

போக்குவரத்து பாதிப்பு 

சாலையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் கேரட் மூட்டைகள் சாலையில் விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூட்டைகளை மற்றொரு லாரிக்கு ஏற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.

 இந்த விபத்து குறித்து எமரால்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரட்டுகளை சுத்திகரித்து சமவெளிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு சென்றால் நல்ல விலை கிடைக்கும். 

இதனால் லாரிகள் வேகமாக இயக்கப்படுவதோடு, விதியை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்லப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்