மண் மூடிய சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

ஊட்டியில் மண் மூடிய சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-20 17:34 GMT
ஊட்டி

ஊட்டியில் மண் மூடிய சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண் மூடிய சாலை 

ஊட்டி நகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்டது நொண்டிமேடு பகுதி. எச்.எம்.டி. பகுதியில் இருந்து நொண்டிமேடுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. 

தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு சாலை மண்மூடி காணப்படுகிறது.
சேறும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சென்று வர முடியவில்லை. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். 

பொதுமக்கள் போராட்டம்  

இந்த நிலையில் சாலையை முழுமையாக சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையை மறித்து சேறும், சகதியுமான இடத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

கலெக்டரிடம் மனு 

இதற்கிடையே அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு அளித்த மனுவில், சாலையில் மண் சரிவு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. 

மேலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே, சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைத்து முழுமையாக சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது. 

மேலும் செய்திகள்