ரூ.14 கோடியே 51 லட்சம் பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் இதுவரை ரூ.14 கோடியே 51 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2021-07-20 17:11 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் இதுவரை ரூ.14 கோடியே 51 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும்  செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த பருத்தி ஏலத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பருத்தி ஏலம், பங்கேற்கும் வியாபாரிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் விற்பனை குழு கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர், பூந்தோட்டம், குடவாசல், வலங்கைமான் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் பருத்தி  ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் திருப்பூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கும்பகோணம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்.
22ஆயிரத்து 345 குவிண்டால் 
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 14ஆயிரத்து 631 குவிண்டாலும், பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3ஆயிரத்து 657 குவிண்டாலும், குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2ஆயிரத்து 598 குவிண்டாலும், வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் 1,458 குவிண்டாலும் ஆக மொத்தம் 22ஆயிரத்து 345 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16ஆயிரத்து 200 மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இதுவரை ரூ.14 கோடியே 51 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,777-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், உதவி கலெக்டர் பாலசந்திரன், திருவாரூர் விற்பனை குழு செயலாளர் சரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வேளாண் விற்பனை குழு கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் முருகானந்தம் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்