தவணை தொகை கட்டாததால் வீட்டை பூட்டிச்சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்

விருத்தாசலம் அருகே தவணை தொகை கட்டாததால் வீட்டை நிதி நிறுவன ஊழியர்கள் பூட்டிச்சென்றனர். இதனால் மனமுடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-20 16:53 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி மனைவி ஐஸ்வர்யா(வயது 28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  விருத்தாசலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அருள், தனது வீட்டுமனைப்பத்திரத்தை கொடுத்து ரூ.2 லட்சம் கடன் பெற்றார். 
இதற்காக அவர் மாதந்தோறும் ரூ.4900 கட்டி வந்தார். கடந்த 2 மாதமாக நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய  தவணை தொகையை கட்டவில்லை. 

வீட்டை பூட்டிய ஊழியர்கள் 

இந்தநிலையில் நேற்று முன்தினம் நிதி நிறுவன ஊழியர்கள் தவணை தொகை வசூலிப்பதற்காக அருள் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது 2 மகன்கள் மட்டும் இருந்தனர். அவர்கள் 2 பேரையும் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டு, அந்த வீட்டு கதவை மூடி பூட்டை வைத்து பூட்டிச்சென்றனர். 
இதற்கிடையில் வெளியே சென்றிருந்த ஐஸ்வர்யா அங்கு வந்து, வீடு பூட்டிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு நடந்த சம்பவத்தை பக்கத்து வீட்டினர் கூறினர். 

தூக்குப்போட்ட பெண் 

இதனால் அவமானம் தாங்க முடியாமல் ஐஸ்வர்யா வீட்டின் சுவரை உடைத்து உள்ளே சென்று, தூக்குப்போட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முற்றுகை

இது பற்றி அறிந்த ஐஸ்வர்யாவின் உறவினர்கள் நேற்று ஒன்று திரண்டு சென்று விருத்தாசலத்தில் உள்ள நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள், ஐஸ்வர்யாவை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆனால் அங்கு மேலாளர் இல்லாதால்,  சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்