வீட்டின் கதவை உடைத்து ரூ.5½ லட்சம் திருட்டு

குடியாத்தம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.5½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-20 16:44 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.5½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

ஆட்டோ டிரைவர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ரங்கநாதர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனை வேலூரில் இருந்தது. அதனை சில மாதங்களுக்கு முன்பு விற்று விட்டனர். 

வீட்டுமனை விற்ற பணத்தில் இருந்து ரூ.5½ லட்சத்தை குடியாத்தம் அருகே லட்சுமணாபுரம் பகுதியில் வசிக்கும் பார்வதியின் தாயார் ராணியிடம் கொடுத்து வைத்துள்ளனர். ராணி அந்த பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார்.

ராணியின் கணவர் கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதால் ராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். 

ரூ.5½ லட்சம் திருட்டு

அவர் குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இரவு லட்சுமணாபுரம் பகுதியில் வீட்டில் தங்குவது வழக்கம். நேற்று  காலை வீட்டிலிருந்து வழக்கம் போல் குடியாத்தம் பிச்சனூர் பகுதிக்கு நெசவு செய்ய ராணி சென்றார். 

மாலை வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.5½ லட்சத்த்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராணி தனது மகள் பார்வதி, மருமகன் சுரேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், பாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்