ஆதிதிராவிடர் மக்கள் புகார்

அவினாசி அருகே நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தங்களை புறக்கணித்ததாக ஆதிதிராவிடர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-07-20 11:47 GMT
அவினாசி
அவினாசி அருகே நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தங்களை புறக்கணித்ததாக ஆதிதிராவிடர்  மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
 அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி வெள்ளியம்பாளையம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் காலை 6 மணி முதல்வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் ஏ.டி.காலனியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடாமல் புறக்கப்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள்   குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது
கொரோனா தடுப்பூசி போடுவது அறிந்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள் வரிசையில் நாங்களும் காத்திருந்தோம். ஆனால் கொரோனா தடுப்பூசி போட நாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் என்று கூறி பலர் இடையில் புகுந்து ஊசி போட்டு சென்றனர். இதனால் ஆதி திராவிடர் .காலனியை சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. 
தடுப்பூசி போடுவதற்கு முன்னதாகவே டோக்கன் கொடுத்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் இடையிடையே செல்பவர்களுக்கு ஊசி போட்டதால் நாங்கள் புறக்கனிக்கப்பட்டோம். வேலைக்கு செல்லமுடியாமல் நீண்ட நேரம்  காத்திருந்து வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது .
இவ்வாறு அவர்கள்  குற்றம்சாட்டினர்.
80 பேர்
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது வெள்ளியம்பாளையம் பகுதியில் 1300க்கு மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் 80 நபர்களுக்கு மட்டுமே மருந்து வைத்திருந்தனர். இவ்வளவு குறைவாக உள்ளதே குறைந்தபட்சம் 300 பேருக்காவது தடுப்பூசி போடவேண்டும் என்று கேட்டதற்கு இது பற்றி எங்களுக்கு தெரியாது உயர்அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளுமாறு கூறிவிட்டனர். மிக குறைந்த அளவே மருந்து வந்ததால் பொதுமக்களுக்கு சரிவர ஊசி போடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
மருத்துவ துறையினர் கூறுகையில்முறைப்படி 80 பேர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி மட்டுமே பயனாளிகளுக்கு தடுப்பூசி போட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் வெள்ளியம்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

---
தடுப்பூசி போட காத்திருந்த ஆதிதிராவிடர் காலனி மக்களை படத்தில் காணலாம்.
-
Image1 File Name : 5177781.jpg
----
Reporter : S. Thirungnanasampandam  Location : Tirupur - Avinashi

மேலும் செய்திகள்