தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ரோடு மறியல்
தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ரோடு மறியல் போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கோவில் முகப்பு கோபுரம் இடிந்து விழுந்ததை கண்டித்து நேற்று இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காளியம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரே காளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் சாலை, வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி அந்த கோவில் அருகேயும் வடிகால் அமைக்கும் பணிக்காக தோண்டினர். ஆனால் அந்த பணிகளை முடிப்பதில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலின் முகப்பு சுவர் கோபுரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, முகப்பு கோபுரம் முழுமையாக இடிந்து விழுந்து விட்டது அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் அந்த பகுதியில் கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனை அறிந்த கோவில் நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் ஜார்ஜ் ரோடு முன்பு திரண்டனர். இதனை அறிந்த தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் அங்கு வந்தனர். அவர்கள் மாநகராட்சியை கண்டித்தும், இடிந்த கோவில் கோபுரத்தை கட்டித்தரக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில்இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயணன் ராஜ், கோவில் நிர்வாக குழு தர்மகர்த்தா ராஜ், தலைவர் வெற்றிவேல், சீனிவாசன், விழா கமிட்டி தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சந்தி வீரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.