இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது
இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்,
கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர் மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ரெகுபதி (வயது 49).இவருடைய தம்பி சித்ரவேல் (40). இருவரும் தொழிலாளிகள். அண்ணன் தம்பிகள் இடையே தங்களின் சொந்த இடத்தில் செங்கல் காளவாய் போடுவதில் இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மேலவெளி தேவநதி ஆற்றங்கரை அருகே சென்று கொண்டிருந்த ரெகுபதியை சித்ரவேல் கல்லால் தாக்கியும், கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.